Sep 30, 2015

காலந்தோறும் பெண் முன்னேற்றம்

                            

பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பேணப்பட்டது என்றும், இடைகாலத்தில் அது பறிக்கப்பட்டு, தற்காலத்தில் மீண்டும் உறுதிசெய்யப்படுவதென்பது என்று ஒரு சாரார் சொன்னாலும் .தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருக்கின்றனர் தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதுதான் உண்மை .

சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்களால்  செய்யப்பட்டவை என்றாலும்  மொத்த புலவர்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்கு மிகச் சிறிதே. பாடியவர்கள் வரிசையில் மட்டுமே பெண்கள் இருகின்றனர் பாடப்படுபவர்கள் வரிசையில் ஒரு பெண்கூட இல்லை என்பது வருத்தத்திற்குரியது எனினும்  பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள் ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் பாடல்கள் காட்டுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெண் தெய்வ வழிபாடும், பெண்கள் இழிவு நிலையில் வைத்திருக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது. பெரும்பான்மைச் சமயங்கள் அனைத்து அதிகாரங்களையும்  கொண்ட இறையை ஆணாக மட்டும் சித்தரிக்கையில், பெண் தெய்வ வழிபாடு ஒரு வேறுபட்ட சிந்தனையை சுட்டி நிக்கிறது.

இவற்றை விடுத்து பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமைகள் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை  ”நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம் ஆண் பெண் வாழ்வு சமத்துவமாகத்தான் இருந்ததென்று தெரிகின்றது. குறவர்கள் வேட்டையாடப் போவதுபோலக் குறத்திகள் குறிசொல்லுவதற்கும், மலைபடு திரவியங்களை விற்பதற்கு புறப்பட்டு விடுவார்கள். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லுவார்கள். மீனவப் பெண்கள் மீன்களைக் கொண்டு போய் விற்பனை செய்து வேறு பண்டங்களை வாங்கி வருவார்கள். முல்லைநில ஆயர்கள் மாடு ஆடுகளைப் பாதுகாப்பார்கள்; ஆய்ச்சியர்கள் தயிர், பால், வெண்ணெய் நிலங்களுக்குக் கொண்டுபோய் விற்பனை செய்து வருவார்கள்.

உயர் சாதிகளிடம் பெண்ணைக் கூடி கட்டுப்பாட்டுகுள் வைத்தினர். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடப்பதே நீதி - கற்பு - இல்லற தர்மம் என்று கருதப்பட்டது.

தொல்காப்பியத்தில் பெண் :

        “அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்

        நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”

”பயமும் நாணமும் அறியாமையும் முற்பட்டு நிற்றல் எப்பொழுதும் பெண்களுக்கு உரிய குணம்”.

        “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை

        எண்ணரும் பாசைறைப் பெண்ணொடு புணரார்”

மேலும் கணவனை இழந்த பெண்ணின் துயரத்தை புறநானூறு காட்சிபடுத்துகிறது. கணவனை இழந்த பெண்ணுக்கு அலங்கரிக்கும் உரிமை இல்லை ,மலர்கள் சூடக்கூடாது ,தனிமை துயரில் தன் எழில் இழந்து இருக்க வேண்டும் .இப்படிப்பட்ட கொடுமையை சாதாரண மகளிரை விட பூக்களை விற்கும் பெண்கள் அதிகமாக துன்படுகிரார்கள் தங்களின் வாணிபம் குன்றி விடுகிறது என்று இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது

” எம்மினும் பேர் எழில் இழந்து வினை எனப்

பிறர்மனை புவல் கொல்லோ

அழியல் தானே ,பூவிலைப்  பெண்டே ”

வெள்ளிவீதியார்,ஔவையார் போன்ற பெண் புலவர்கள் பாடல்களை பாடியிருந்தாலும் ஓதல் பிரிவு பெண்களுக்குரியதாக இல்லை .

சங்க காலத்தில் பெண்கள் சுதந்திரமாக காதலித்து திருமணம் செய்திருந்தார்கள் என்ற செய்தியை குறுந்தொகை பாடல் மூலம் அறிகிறோம் .ஆணும் பெண்ணும்  புணர்ச்சியில் இணைந்து களவு மனம் புரிந்ததை விளக்கும் பாடல்

” யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ”

இப்படி களவு கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் என்று சொல்லும் அதே காலத்தில்தான் உடன்போக்கு பெரும் குற்றம் என்பது போன்ற கருத்தையும் தொல்காப்பியர் முன் வைக்கிறார் .

” கொடுப்போரின்றியும் கரணம் உண்டே

புணர்ந்துடன் போகிய காலையான ”

என்ற பாடலில்  பெண்களின் காதல் மனச் சுதந்திரதிற்குத்  தடை இருந்துள்ளதையும் , அந்த தடையை மீறி பெண் களவு மணம்  மேற்கொண்டுள்ளதையும் அறிய முடிகிறது .சங்க காலத்து உடன்போக்கை பிற்கால சமூகம் ஏற்றுகொள்ளபடவில்லை என்பதையும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும் .

மேலும் பெண் அடிமைக்கான கட்டமைப்பை சங்க இலக்கியத்தில் கச்சிதமாக ஏற்படுதியிருகிறார்கள் என்பதை நற்றிணை பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது .

” அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ”

இதையே தொல்காப்பியம்

“விருந்து புறந்தருதலும் , சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன  கிழவோள் ”

என்ற நூற்பாவில் விருந்தோம்பல் என்பது பெண்ணுக்குரிய தலையாய கடனாக கட்டமைக்கபட்டிருப்பதை  காணலாம் எல்லா நேரங்களிலும் பொழுதுபாராமல் பெண் விருந்தோம்பலை செய்ய வேண்டும் என்று பணிக்க பட்டிருப்பதை இந்த பாடல் விளக்குகிறது.

அகப்பாடல்களில் பெண்கள் ஆணுக்காக உருகி காத்திருக்கும் அவலநிலையும் ஆண் காமக் கிழத்தியுடன் சென்றுவிட்டு வந்தாலும் அவனை ஏற்றுகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது . இதற்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புறம் குறித்து பேசும்பொழுது  முரணாக இருக்கிறது.

“நரம்பு எழுந்து உலறிய நிரம்ப மென்தோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்

படை அழிந்து மாறினன் என்று பலர்கூற

மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்

முலை அறுத்திடுவென், யான்எனச் சினைஇக்

கொண்ட வாளடு படுபிணம் பெயராச்

செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!  (புறநானூறு: 278)

பூங்கண் உத்திரையார் வீரம் குறித்து பாடிய பாடலில் பெண்ணுக்கான சமூக கட்டமைப்பை கட்டமைத்துள்ளார். கொக்கின் மெல்லிய இறகு போன்ற நரைத்த கூந்தலுடைய வயதான தாயின் இளைய மகன், போரில் எதிர்த்து வந்த யானையைக் கொன்றுவிட்டு, அவனும் இறந்து விட்டான். இச்செய்தியைக் கேட்டவுடன், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கும் மேலாகத் தாய் மகிழ்ந்தாள்; கண்ணீர் உதிர்த்தாள் என்ற சொல்லப்பட்ட இப்பாடலில், தாய்க்கும் மகனுக்குமான குருதித் தொடர்பினை விட, அரசியல் உறவு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மகனின் இறப்பு தரும் வலியை விட, வீரமான மரணம் குறித்துத் தாய் மகிழ வேண்டும் என்ற போதனை பாடலின் வழியே வெளிப்பட்டுள்ளது. இது அகத்துக்கு முற்றிலும் மாறுபட்டு பெண்ணை சித்தரிக்ககூடியதாக இருக்கிறது .

திருக்குறளில் பெண் :

பொதுமறையாக கருதப்படும் திருக்குறளிலும் திருவள்ளுவர் ”பெண்கள் இல்லறத்தை நன்றாக நடத்துவதற்குத்தான் உரியவர்கள்; பொது வாழ்க்கையில் பங்குகொள்ள உரியவர்கள் அல்லர் என்றுதான் கருதுகிறார்.

        இல்லாள்கண் தாழ்ந்து இயல்பின்மை எஞ்ஞான்றும்

        நல்லாருள் நாணுத் தரும்      

    திருக்குறளிலும், “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் பெயனப் பெய்யும் மழை” என்பன போன்ற பெண்ணடிமைத்தனக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பெண்வழிச் சேறல் (செல்லுதல்) கூடாது என்று தனியாக ஓர் அதிகாரமே அமைந்துள்ளது.

தமிழ்க் காப்பியங்களில் பெண் :

தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டில் மட்டுமே பெண்களை ஓரளவு மதித்துப் போற்றும் போக்கு காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பெண்ணை மேம்படுத்தி நோக்கினாலும், கற்பு என்னும் கூண்டிற்குள் அடைத்து அவளை தெய்வமாக்கிவிடுகிறது. மணிமேகலையில் மட்டும்தான் மிகக் கீழ்நிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆசிரியர் உயர்த்திக் காட்டியிருக்கிறார். பிற எல்லா நூல்களும் பெண்களை நுகர்பொருள் என்னும் அளவிற்கு மேல் நோக்கவில்லை.

சங்கக் கவிதையை விட்டால்,பெண்குரல் பதிவுகள் ஆழமாக இடம்பெறுவது ஆண்டாள் வழியாகவே. ஆண்டாளுக்கு முன்னதாகவே காரைக்காலம்மையார் வாழ்ந்திருக்கிறார் என்றாலும் அவரது குரல் பெண்ணின் தனித்த குரலாகப் பதிவாக வில்லை. சிவபெருமானோடு அவரது உறவு தந்தை-மகள் உறவாகவும், தாய்-மகன் உறவாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பதிவு ஆண்டாள் போல் ஆழமாக இல்லை. காரைக்காலம்மை வாயிலாக ஒலிப்பது காலங்காலமாகப் பின்னர் பக்திக்காலத்தில் நாம் கேட்கப்போகும் ஆண் குரல்களே. ஆண்டாளுக்குப் பின் நீண்ட மௌனம்.

பக்தி இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் பெண் இறுதிநிலையில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவள் என்றும், அப்போதுதான் முக்தியடைய இயலும் என்றும் போதிக்கின்றன. இந்த நோக்குதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை கோலோச்சியிருந்தது. பெண்கள் உடல்களாகவே நோக்கப்பட்டனர். பெண் உடலின் சமூக அடையாளம் என்பது மறு உற்பத்தியில் அவள் ஈடுபடக்கூடியவள் (ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே), குடும்ப அடையாளம் ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருக்கிறது.

1882 முதல் 1921 வரை ஆண்டு பாரதியின் காலம் நிகழ்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் முகிழத் தொடங்கியது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலைகவிழத்தொடங்கினர்.

என்ற பாரதியின் கருத்துகள் இந்தியாவில் விடுதலைக்குச் சற்று முந்தைய காலப் பெண்களின் அடிமை நிலையைத் தெற்றென விளக்குவதாகும்.

ஆணுக்குச் சமமான உரிமைகளைப் பெண் பெறவிரும்பும் காலக்கட்டமாக பாரதியின் காலக்கட்டம் இருந்துள்ளது.

“கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம் “

பாரதிகால பெண்ணியம் என்பது பாரதி வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இருந்து அரசியல், சமூக நிலை குறித்து அமைவதாகும்.

”பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

என்று ஆண்குலத்திற்கு ஓர் பெண் மூலமாக எச்சரிக்கை விடுக்கின்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .

பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திச் சொல்கின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.

இவர்களின் காலத்திற்கு பின்பும் பெரும் புரட்சி ஏற்பட்டாலும் பெண்ணின் அக வாழ்விலும் சமூகத்திலும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது இருபதாம் நூற்றாண்டில்தான் .பெண் தனக்கான வழியை தானே வெளிப்படையாக வெளிபடுத்தகூடிய புதிய ஒரு மொழியை உருவாக்கினால் பெண்மொழியில் தன் குரலை எழுப்பினால் . ஆண்கள்தான் உடலைப் பற்றிப்  காலங்காலமாக பேசிகொண்டிருந்தார்கள் அதுவும் பெண் உடல் குறித்து ஆணின் மொழிதான் அதிகமாவும் அதிகாரமாகவும் இருந்து வந்தது , சிற்றிடை, பெரிய மார்பு, அல்குல் என்று வருணித்துவந்தார்கள் , இந்த நூற்றாண்டில் பெண்ணின் உடல் குறித்து பெண்ணே  வருணிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை . என்று துணிந்து தன் உடல் குறித்த புரிதல்களை இந்த சமூகத்திற்கு புரிய வைக்கும் வகையில் பெண்மொழி உருவானது .

சமூக வாழ்வின் அடித்தளமாய் . வரலாற்று நெடுகிலும் பெண் தன்  இருப்பை உணர்ந்து செயல்பட இயலாத நெருக்கடிக்கு ஆளானதை இலக்கியம் உணர்த்தும். பெண் ஆணின் உடைமை என்ற தாக்கமே இன்றும் இச்சமூகத்தில் நிலவுகிறது .பெண்ணின் உடல் ஆணின் ஆக்கிரமிப்பிற்கும் ஆளுமைக்கும் உட்பட்டதாகவே இந்த சமூகம் கருதுகிறது கணவன் மனைவி உறவு என்பது ஆண்டான் அடிமை உறவாகவே அமைந்துள்ளது . ஒழுக்க விதிகள் பெண்ணுக்கு வலியுறுத்தபடுகிறது ஆணுக்கு விதிகள் வகுக்க படவில்லை ..

இலக்கியங்கள் பெண்ணை மிகையாக அடிமை படுத்தியுள்ளது என்பதற்கு சீதை பெரிய உதாரணம் ராமாயணத்தில் தன் கற்பை  நிருபிக்க தீக்குளித்தாள் சீதை காப்பிய சீதை ஆனால் இன்று காலம் கொஞ்சம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது .

”அக்னிபிரவேசம்

என் சத்தியத்தை

நிருபிக்கவல்ல

நீ தொட்ட

கரைகளைக் கழுவ

என்று கவிஞர் கனிமொழி தன்னுடைய கட்டமைப்பை உடைத்து சொல்லியிருக்கிறார் .

90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் ”பிரதானப் போக்குகளை” கவனிக்கதக்கனவாக இருக்கின்றன.

”என் உடலுடன்

நான் உறங்க வேண்டும்

இடது கரத்தால் சிவனைப்

பிய்த்தெறிந்து விட்டு”

என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.

மேலும் தன் உடல் குறித்தான வெளிப்படையான பார்வையை கவிஞர் சுகிர்தராணி தன் கவிதை மூலம் வெளிபடுத்துகிறார்.

” தொடைகளின் அடிச்சதையில்

நிண  நீர் வளிந்தோட

பூவின் மடல் கிழிந்த வலி உணருகிறேன் .”

என்று தன் இருப்பை வெளிபடுத்துகிறார் .

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், அவர்தம் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் அசம்பாவிதச் செயல்களும் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனை தருவதாகவே உள்ளது.
இன்றைய ஊடகங்கள் பெண்ணை மட்டுமே மிகைபடுதுவதன் மூலமாக தங்களின் வருமானத்தை அதிகரிக்கிறார்கள் ஆனால்  இவர்கள் வெளியிடும் பெண்  குறித்த மிகைபடுத்தப்பட்ட செய்திகள் மூலமாக பெண்ணின் மானத்தை பறக்கவிட்டுதான் வரு மானத்தை சம்பாதிகிறார்கள் என்பதை  மறந்துவிடுகிறார்கள் .
சங்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனையோ   மாற்றங்கள் வந்தாலும் மாறாத ஓன்று பெண்ணை போக பொருளாக பார்ப்பதும் வியாபார பொருளாக்கி சந்தையில் விற்பதும் ,உலகமய மாக்கள் மூலமாக எல்லா  நாடுகளிலும் விற்பனையாகும் பொருள்களுக்கு காட்சிபடுத்தும் பொருளாக பெண்ணை மட்டுமே முன்னிலை படுத்துவது இன்றளவும் மாறாமல் தான் இருக்கிறது .
ஒரு பெண்ணின் விடுதலை தான் ஒரு  விடுதலை என்பதை உணர்ந்து செயல்படாதவரை அந்த நாடு விடுதலை அடையாது என்கிறார் தோழர் லெனின் .ஆகவே பெண்ணை சக மனுசியாக மதிக்க இந்த சமூகம் முன்  வர வேண்டும் .தனி ஒரு  பெண்ணின் வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சியாகும் ஆகவே பெண் தனியாக தொழில் தொடங்க முன்வாருங்கள் .யாரிடமும் அடிமையாக இருக்காமல் சொந்த காலில் நின்று நாலுபேருக்கு வேலை கொடுக்கும் தகுதியை வளர்த்துகொள்ளவதன் மூலம் இந்த சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கலாம் .

ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள்  ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் பெண் தரிசிக்காத உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும். அவற்றை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டும் தாய்வழி சமூகத்தின் மேன்மையை உலகறிய செய்யவேண்டும் எனில் உங்களை நீங்கள் உணருங்கள் உயர்த்துங்கள் .

-கவிஞர் கோவை .மு.சரளா 

இந்த கட்டுரை 

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்விற்காக  எழுதப்பட்டது வேறு எங்கும் வெளியிடவில்லை எனுரிதியளிகிறேன் 

Jul 28, 2015

காலனை வெற்றவன் நீ

காலனை வெற்றவன் நீ
மனித இனம் மண்ணில்
மறையும் வரை மறையாது -உன்
மகத்துவங்கள்

சாதி மதம் பேதம் இல்லாமல்
சமத்துவமாக வாழ்ந்து
சமத்துவத்தை ஓதியவன்

பிறப்பு தரித்திரமாக இருந்தாலும்
இறப்பு சரித்திரமாக இருக்கவேண்டும் -என்று
சரித்திரம் படைத்த நாயகனே
இளைய சமுதாயத்தின்
கனவு நாயகனே -

யானையைப் போல வீர மரணம் எய்திருக்கிறாய்
இருக்கும் போதும் பொன் செய்தாய்
இறந்தபின்னும் உன் பொன் மொழிகள்
மனிதர்களை  பண்படுத்தும்

எப்படி வாழவேண்டும் என்ற
இலக்கணத்தோடு வாழ்ந்த
எத்தனையோ சான்றோர்களின்
பட்டியலில்  மாமனிதனாக நீ

மற்றவர்களுகாகவே தன்
வாழ்நாளை ஒப்படைத்த
மகான் மக்களின் மனதில்
நீங்கா இடம்பிடித்தவன்

நீ விதைத்த கனவுகள்
வீரியமானவை நிச்சயமாக
பிரமாண்ட விருச்சங்களை
உருவாக்கி நாளைய இந்தியாவை
வல்லரசாக்கும்

நம்பிக்கை கொள்கிறோம்
உறுதி கொள்கிறோம்
இந்த நாள் கனவுகள் நனவாக
நாங்கள் சபதம் எடுக்கும் நாள்

அகில உலகின் நாயகனே
அப்துல் கலாமே
உன் ஆன்மா சாந்தியடையட்டும்
எல்லாம் வல்ல இறைவன்
எப்போதும் உன்னுடன் 

Jun 15, 2015

தினமலரில் என் நேர்காணல்அன்பின் இணைபிரியா தோழமைகளுக்கு

நெடுநாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்வு ..

கால வெள்ளத்தின் ஓட்டத்தில் நான் ஒரு இலையை போல மிதந்து கடந்துகொண்டிருந்தேன் சற்றென்று வெள்ளத்தின் ஓட்டம் தீவிரம் அடைந்ததில் கரைபுரளும் அவ்வலைகளின் ஊடே காணாமல் போய்விடுவேனோ ? என்ற என் எண்ணத்தை பொய்யாக்கி அனுபவம் என்னும் மிகப்பெரும் கல்வியை எனக்கு போதித்து வாழ்க்கை .

நகர்வுகள் அனைத்தும் சவால்களாக இருக்க எல்லாவற்றையும் எதிர்கொண்டு மலைகளை துகள்களாக  மாற்றும் பணிகளில் ஆயதமானேன் நம்பிக்கை என்னும் உளி மட்டுமே என் வசம் .

அனுபவங்களை மற்றவர்களுக்கு பாடமாக்கினேன் பகிர்தலின் இன்பம் மட்டுமே என் உயிர்ப்பானது .

தன்னம்பிக்கை பெண் விழிப்புணர்வு என்று என் பாதைகளில் பார்த்தவற்றை அனுபவித்தவற்றை மற்றவர்களுக்கு கடத்துவதே என்  வாழ்வின் ஒரு பங்கு என வாய்ப்புகளை உருவாக்கி பேச தொடங்குனேன் .

பள்ளி கல்லூரி என ஆரமித்து மகளிர் கூட்டமைப்பு ,விடுதிகள் என பல்வேறு திசைகளில் காற்றோடு நானும் பயணித்ததில் என் வாழ்வின் அர்த்தம் புரிந்தது .எதற்காகவோ நாம்   படைக்க பட்டிருக்கிறோம் அந்த எது இதுதானா ? என்ற புரிதல் என்னை முழுமையாக்கியது .

காசு ,பணம் ,புகழ் எல்லாவற்றையும் கடந்த என் படைப்பின் நோக்கம் எனக்குள் பெரும் விழிப்பை உருவாக்கியது .என்னை நான் ஒளிரவைக்கும் உன்னதம் புலப்பட்டது .

இவை சாதனைகள் தான் என்று அன்னை தெரசா அறகட்டளை 2015 க்கான சாதனை பெண்களுக்கான விருதை ஆறு பெண்களுக்கு வழங்கியது  அதில் "பெண்கள் விழிப்புணர்வு சாதனையாளர் " என்ற விருதை எனக்கு கொடுத்து கௌரவித்தது ."எதை விதைக்கிறோமோ அதை நிச்சயம் அறுவடை செய்ய இயலும் " இந்த வரி எத்தனை உண்மையானது .


மீண்டும் என் மன ஓட்டத்தை உங்களோடு பகிர வருகிறேன் .
மேலும் "உள்ளத்தின் ஓசை " என்று நான் இணையத்தில் எழுதிகொண்டிருந்த என் ஆழ் மன பதிவு அச்சில் இருக்கிறது இந்த வருடம் நூலாக வெளிவர இருக்கிறது .


கவிதை என் இளம்பிராயத்தில் அறிமுகமாகி இருந்த காலத்தில் பாரதியை  மட்டுமே நான் அறிந்திருந்தேன் .அதன் பின் பொன்னியின் செல்வன் வாசிக்கும் பொழுது உணர்வுகளின்  எல்லை கோடுகளை தொடும் பாக்கியம் கிடைத்தது அதன் வெளிப்பாடு எனக்குள் கவிதை ஊற்றெடுத்தது .

கல்லூரி காலத்தில்தான் நான் வைரமுத்து ,மேத்தா ,தேவதச்சன்,ந.பிச்சமூர்த்தி  இவர்களை படித்தேன் அதன் பின் என் எழுத்தில் ஒரு வளர்ச்சி  உருவாகி இருக்கும் ஆனால் நான் ஆரம்பத்தில் பாரதியை மட்டுமே வாசித்தேன் .

" தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுது டா " என்று கண்ணனுக்காக உருகி பாடிய அந்த வரிகள் என்னையும் கண்ணனுக்காக உருக வைத்தது .

13.06.2015 சனிகிழமை தினமலரில் பிரசுரமான என்னுடைய நேர்காணல்
நிறைய கேள்விகளை கவிஞர் .தென்பாண்டியன் கேட்டார் முற்போக்கான பல பதில்களை நான் முன் வைத்தேன் அவற்றை பிரசுரித்திருக்க மாட்டார் என்று நினைத்தேன் ஆனால் அப்படியே வெளியிட்டதில் மகிழ்ச்சி நன்றி கவிஞர். தென்பாண்டியன் அவர்களுக்கு .
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2015/06/13/ArticleHtmls/13062015254010.shtml?Mode=1